செய்திகள்

தமிழகத்தில் பெண்களால் மட்டுமே ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும்: ராமதாஸ்

தமிழகத்தில் பெண்களால் மட்டுமே ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேசினார். #BusFareHike

மாலை மலர்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் இன்று பா.ம.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 100 சதவீத அளவிற்கு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலேயே இதுபோன்று பஸ் கட்டணம் உயர்த்தியது கிடையாது. விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் செல்ல கட்டணம் 35 ரூபாய் தான். ஆனால் பஸ்சில் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு செல்ல 155 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

வருகிற பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக அரசுக்கு 5ž கோடி லட்சம் கடன் உள்ளது. பிறக்கின்ற குழந்தைக்குகூட கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இந்த பஸ் கட்டண உயர்வுக்கு அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் ஆகும்.


தமிழக அரசு ஊழல், லஞ்சம், லாவண்யத்தில் சிக்கி தவிக்கிறது. தமிழகத்தில் 22 ஆயிரத்து 500 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களை இயக்கவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும் 85 ஆயிரம் பேர் இருந்தால் போதும். ஆனால் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர்.

பஸ்சில் கண்டக்டர் - டிரைவர் வேலைக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது. ரூ.200, 300 பெற்றுக்கொண்டு நீங்கள் வாக்களித்தீர்கள் அதனால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாற்றம் வேண்டும். இந்த மாற்றத்தை பெண்களால் மட்டுமே கொண்டு வர முடியும். எனவே தமிழகத்தில் நல்லாட்சி மலர நீங்கள் அனைவரும் பா.ம.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.