செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையில்லை: ராமதாஸ் அறிக்கை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் இல்லாததால் இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையில்லை என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

மாலை மலர்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவருக்கு இசட் பிளஸ் எனப்படும் கருப்புப்பூனைப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எடப்பாடிக்கு இசட் பிளஸ் காவல் தேவை என்பது நல்ல நகைச்சுவை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை. இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது சசிகலாவின் ஆதரவுடன் விலை கொடுத்து வாங்குவதற்கு முதல்வர் பதவி அல்ல.

இந்தியாவில் இன்றைய நிலையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி, பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 17 பேருக்கு மட்டுமே இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவர்களின் உயிருக்கான அச்சுறுத்தல் அளவிட முடியாது. ஆனாலும் கூட இவர்களில் பலருக்கு வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இசட் பிளஸ் பாதுகாப்பு பெற்று வரும் தலைவர்களுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலுடன் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை ஒப்பிடவே முடியாது. இன்னும் கேட்டால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை.

உதாரணமாக ஆந்திரத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்க சந்திரபாபு நாயுடு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டதால், அவரை திருப்பதி மலைப்பாதையில் குண்டு வெடிப்பு நிகழ்த்தி படுகொலை செய்ய முயற்சி நடந்தது. அத்தாக்குதலில் கடுமையான காயங்களுடன் சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினார். அதனால் அவருக்கு உயர்நிலை இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

விடுதலைப்புலிகளால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று கூறி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இசட் பிளஸ் பாதுகாப்பு பெற்றார். ஆனால், டெங்கு கொசுக்களைக் கூட ஒழிக்காத பழனிச்சாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறினால் குழந்தைகள் கூட சிரிக்கும்.


எடப்பாடி பழனிசாமி, தம்மை ஓர் ஆண் ஜெயலலிதாவாகவே நினைத்துக் கொண்டு அவரைப் போலவே செயல்பட்டு வருகிறார். எங்கு சென்றாலும் வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான காவலர்களை நிறுத்தி, அதன் காரணமாக தமது தகுதி உயர்ந்து விட்டதாக நினைத்து புளகாங்கிதம் அடைந்து கொள்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு 22 பேர் கொண்ட இசட் பிரிவு பாதுகாப்பும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 11 பேர் கொண்ட ஒய் பிரிவு பாதுகாப்பும் வழங்கப்படுவதால் அவர்களைவிட அதிகமாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இணையான இசட் பிளஸ் பாதுகாப்பு கிடைத்தால் பந்தாவாக இருக்கும் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு பரிந்துரையை தமது கட்டுப்பாட்டில் செயல்படும் உளப்பிரிவின் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பச் செய்திருக்கிறார்.

நாட்டின் முக்கியமான தலைவர்களுக்கு இசட் பிளஸ், இசட் பிரிவு, ஒய் பிரிவு, எக்ஸ் பிரிவு ஆகிய நான்கு வகையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதற்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை செலவாகிறது.

தி.மு.க. தலைவர் கலைஞர், பீகார் முன்னாள் முதல்- மந்திரி லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டு விட்டது.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அவரது சகோதரர் அழகிரியால் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று 2014-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கலைஞர் கடிதம் எழுதினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

அவ்வாறு இருக்கும் போது எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த வகையான சிறப்புப் பாதுகாப்பும் தேவையில்லை.

இசட் பிளஸ் பாதுகாப்பு அணியில் 36 முதல் 55 பேர் வரை இருப்பர். இவர்களில் குறைந்தது 10 பேர் கமாண்டோக்களாக இருப்பார்கள். இத்தகைய பாதுகாப்புப் படைக்காக ஆண்டுக்கு ரூ.6 கோடி மக்களின் வரிப்பணம் வீணாக செலவாகும்.

இவ்வளவு செலவு செய்து பாதுகாப்பு அளிக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி எந்த தியாகத்தையும் செய்து விடவில்லை.... ஊழல் மட்டும் தான் செய்து வருகிறார். அவருக்கு கறுப்புப் பூனைப்படை பாதுகாப்பு வழங்குவது அப்படைக்கு செய்யும் அவமரியாதை ஆகும். எனவே, பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் காவல் கோரப்பட்டால் அதை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.