பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை, ஆறு வார அவகாசத்திற்குள் கொண்டு வர வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம், நிறை வேற்றப்பட்டிருக்கிறது.
காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் விமர்சிக்க நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதாக நினைத்துக் கொண்டு வீண் முயற்சிகளில் ஈடுபட்டு காலத்தை இழப்பது வருத்தமளிக்கிறது.
சட்டப்பேரவையில் இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உறுப்பினர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், அதில் மேலாண்மை வாரியத்தை அடுத்த 6 வாரங்களில் அமைக்க வேண்டும்; இந்த விஷயத்தில் இனியும் கால நீட்டிப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டிருப்பதையும் மேற்கோள் காட்டியுள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் ஒருபடி மேலே போய், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை; அதனால் உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவதற்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதைக் கேட்கும்போது தான் காவிரிப் பிரச்சினையின் தீவிரம் முதலமைச்சருக்கு இன்னும் புரியவில்லையா? அல்லது புரிந்து கொண்டும் புரியாதது போல நடிக்கிறாரா? என்ற ஐயம் ஏற்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி கூறுவதைப் போல இது அவ்வளவு சாதாரணமான விஷயமும் இல்லை... உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அப்படியே செயல்படுத்த மத்திய அரசு நேர்மையானது மல்ல.
மத்தியில் எந்தக்கட்சி ஆட்சி செய்தாலும், அந்தக் கட்சிகளுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை என்பதால், அவை தமிழக நலன்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. மாறாக, கர்நாடகத்தில் தங்கள் அரசியல் நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகின்றன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நினைப்பதைப் போல மத்தியில் ஆளும் கட்சிகள் நேர்மையாகவும், நடுநிலையாகவும் செயல்பட்டிருந்தால் 2007ஆம் ஆண்டு நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய உடனேயே அமைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்; அப்போது இல்லாவிட்டாலும் 2013ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்ட போதாவது மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்.
அதன்பின் 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பிறகு அடுத்த 2 வாரங்களில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி வாக்குறுதி அளித்த போதாவது அது சாத்தியமாகியிருக்க வேண்டும்; 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அடுத்த 4 நாட்களில் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நேரத்திலாவது அதை செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை அரசு செய்ததா?
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற நெருக்கடி கடந்த காலங்களில் 4 முறை ஏற்பட்ட போதும் அதை மதிக்காத மத்திய அரசு, இப்போது மட்டும் அதை மதித்து மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்று முதலமைச்சர் நம்புவது விந்தையாக உள்ளது. அதிலும் குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க உத்தரவாதம் அளிக்க முடியாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும், மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை என்று நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங்கும் கூறி வரும் நிலையில், வாரியம் குறித்த காலத்தில் அமைக்கப்பட்டு விடும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் எடப்பாடி கூறுவதைப் பார்க்கும் போது அவர் எந்த உலகில் வாழ்கிறார்? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கு தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்படும் அழுத்தம் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். மாறாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடமைக்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதால் எந்த பயனும் ஏற்படாது. முதலமைச்சர் அவரது உரையில் குறிப்பிட்டவாறு இதே பிரச்சினைக்காக பேரவையில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனினும், அவற்றால் எந்த பயனும் ஏற்படவில்லை என்பதை அனைவரும் நன்றாக அறிவார்கள்.
ஆனாலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவே இருக்கட்டும். அத்துடன் கூடுதலாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் டெல்லி சென்று போராட்டம் நடத்துதல், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுதல் என்பன போன்று மத்திய அரசுக்கு உண்மையாகவே அழுத்தமும், நெருக்கடியும் தரும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.