செய்திகள்

ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் முடிவுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நினைவு மண்டபம் எனப்படுவது பொதுவாழ்வில் ஒழுக்க சீலர்களாகவும், தியாகத் திருவிளக்காகவும் விளங்கியவர்களை போற்றுவதற்காக அமைக்கப்படுவது ஆகும். சிறந்த தலைவர்களின் சிலைகள் மற்றும் நினைவிடங்களை அடுத்தடுத்த தலைமுறையினர் பார்க்கும் போது, அந்த தலைவர்களைப் போல நாமும் வாழ்ந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்பதற்காகத் தான் நினைவிடங்கள் அமைக்கப்படுகின்றன.

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் பட்சத்தில் அவரது வாழ்க்கையிலிருந்து அடுத்தடுத்த தலைமுறையினர் கற்றுக் கொள்ள என்ன இருக்கும்? தொட்டில் குழந்தை திட்டம் முதல் சுடுகாட்டு கூறை வரை அனைத்து நிலைகளிலும் ஊழல் செய்து லட்சக்கணக்கான கோடிகளை குவித்தார் என்பதைத் தான் ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து கற்க முடியும்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அமிதவாராய், ‘‘உயிர்க்கொல்லி தீமையான ஊழலின் பிடியிலிருந்து குடிமக்கள் சமுதாயத்தை மீட்க வேண்டும். நமது முன்னோர் மற்றும் இந்திய விடுதலைக்காக போராடிய தியாக சீலர்களால் கனவு காணப்பட்ட நிலையான, நியாயமான, உன்னதமான சமூக அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால், இப்புனித பணியில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார். சாதாரண குடிமகனுக்கான இந்த அழைப்பு தமிழக அரசுக்கும் பொருந்தும்.

எனவே, வருங்காலத் தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டுதலை வழங்குவதை தவிர்ப்பதற்காக, ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.