செய்திகள்

கதிராமங்கல போராட்டம்: குண்டர் சட்டத்தில் 10 பேரை கைது செய்ய முயற்சி - ராமதாஸ் குற்றச்சாட்டு

கதிராமங்கலம் போராளிகள் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீதும் குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கும் எண்ணம் இருந்தால், அதைக் கைவிட்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறி உள்ளார்.

மாலை மலர்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என். ஜி.சி நிறுவனம் செயல்படுத்தப்படவிருக்கும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும், காவல்துறை அடக்குமுறையை கண்டித்தும் போராட்டங்களை நடத்தி வரும் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்த செய்திகள் உண்மையாக இருந்தால் கண்டிக்கத்தக்கவை.

கதிராமங்கலத்திலிருந்து குத்தாலத்திற்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் எண்ணெய்க் குழாயில் கடந்த ஜூன் 30ஆம் தேதி உடைப்பு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். ஆனால், தேவையே இல்லாமல், அந்த போராட்டத்தை மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் தான் தூண்டியதாகக் கூறி வழக்குத் தொடர்ந்த தமிழக அரசு அவர்களை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளது.

அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கதிராமங்கலம் வந்து மக்களுடன் பேச்சு நடத்திய மாவட்ட ஆட்சியர், கைதான 10 பேரும் ஜூன் 4ஆம் தேதி விடுதலை செய்யப்படுவர் என்றும், அவர்களின் பிணை மனு விசாரணைக்கு வரும் போது அதை காவல் துறையினர் எதிர்க்க மாட்டார்கள் என்றும் உறுதியளித்திருந்தார்.

ஆனால், அவர்களின் பிணை மனு விசாரணைக்கு வந்த போது, காவல் துறை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அவர்கள் அனைவருக்கும் பிணை மறுக்கப்பட்டு விட்டது. போராளிகள் 10 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியாளர்கள் முடிவு செய்திருப்பதாகவும், அதற்காகவே புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக மக்களின் நலன் காப்பது தான் ஆட்சியாளர்களின் கடமை என்பதை எடப்பாடி தலைமையிலான அரசு உணர வேண்டும். பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட கதிராமங்கலம் போராளிகள் 10 பேர் மீதும் குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கும் எண்ணம் இருந்தால், அதைக் கைவிட்டு உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

மாறாக, மத்திய அரசின் அழுத்தத்திற்கு பணிந்து அவர்கள் மீது புதுப்புது வழக்குகளை பதிவு செய்து, குண்டர் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பழி வாங்கத் துடித்தால் தமிழக அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும். உரிமைக்காகவும், தாய்க்கு இணையான விளைநிலங்களையும் பாதுகாக்க போராடும் மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியும் துணை நிற்கும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.