புதுடெல்லி:
இந்திய விமானப்படையின் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அர்ஜன் சிங். 98 வயதான அவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
டெல்லியில் உள்ள கவுட்டில்யா மார்க் பகுதியில் உள்ள அர்ஜன் சிங் வீட்டுக்கு காலை அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
நாட்டுக்கு அவர் ஆற்றிய அரிய சேவையை கவுரவிக்கும் வகையில் திங்கட்கிழமையன்று அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று அர்ஜன் சிங் வீட்டுக்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள அர்ஜன் சிங்கின் உடலுக்கு மலர் வளையல் வைத்து அஞ்சலி செலுத்திய அவர், அர்ஜன் சிங்கின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
ரானுவ மந்திரி நிர்மலா சீத்தாராமன், இந்திய விமானப்படை தளபதி பிரேந்தர் சிங், கடற்படை தளபதி சுனில் லான்பா, ராணுவ தளபதி பிப்பின் ராவத் மற்றும் முப்படைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.