சென்னை:
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தின் போது பெண்கள், ஆண்களை சகோதரராக பாவித்து ராக்கி கயிறு அணிவிப்பது வழக்கம்.
புனித கயிறான ராக்கி கயிறு சகோதர உணர்வை வளர்க்க சகோதரி சகோதரனுக்கு அணிவிக்கும் விழாவாக மட்டுமின்றி உண்மையான நிரந்தர பாதுகாப்பை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதற்காகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரக்ஷா என்றால் பாதுகாப்பு. பந்தன் என்றால் கட்டுப்படுவது... அதாவது பாதுகாக்க கட்டுப்படுவது என்பது இதன் பொருள்.
மனிதன், மனிதனுக்கு நிரந்தர பாதுகாப்பு கொடுக்க இயலாத பட்சத்தில் யார் யாருக்கு பாதுகாப்பு கொடுப்பது என்று பார்த்தால் நம் அனைவருக்கும் இறைவனைத்தவிர யாரும் பாதுகாப்பு தர இயலாது. அவரே அன்பு, ஆனந்தம், அமைதி மற்றும் சக்தியின் கடலாக விளங்குகின்றார்.
நாம் தியானம் செய்ய உறுதி எடுக்கும் பொழுது இறைவன் நம்மை பாதுகாக்க கட்டுப்படுகின்றார். மேலும் அவர் தரும் இந்த ராக்கி கயிறு அணியும் போது அன்பு, கருணை மற்றும் ஒத்துழைப்பு போன்ற நற்பண்புகள் நிறைந்த தாமரை மலருக்கு சமமாக வாழ முடியும்.
இதுவே நிரந்தர பாதுகாப்புக்கு வழி வகுக்கும். இதுவே உண்மையான ரக்ஷா பந்தன் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இன்று நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண்கள் சகோதரத்துவத்தை வளர்க்கும் வகையில் ஆண்களை சகோதரர்களாக பாவித்து ராக்கி கயிறு அணிவித்தனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் தலைமை அலுவலகம் சார்பில் இன்று சகோதரத்துவத்தை வளர்க்கும் வகையில் இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை முழுவதும் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் 23 கிளைகளில் இருந்து பிரம்ம குமாரி சகோதரி கீதாஞ்சலி தலைமையிலான சகோதர, சகோதரிகள் பல்வேறு குழுக்களாக சென்று ராக்கி கயிறு அணிவித்தனர்.
தலைமை செயலகம், ஐகோர்ட்டு, மத்திய அரசு அலுவலகங்கள், மாநில அரசு அலுவலகங்களுக்கு பிரம்ம குமாரிகள் அமைப்பினர் சென்று அங்குள்ள ஊழியர்களுக்கு ராக்கி கயிறு அணிவித்தனர்.