செய்திகள்

மாயாவதி ராஜினாமாவை திரும்ப பெறவேண்டும் என்பதே மாநிலங்களவையின் விருப்பம்: துணை சபாநாயகர்

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ராஜினாமாவை திரும்ப பெறவேண்டும் என்பதே மாநிலங்களவையின் விருப்பம் என துணை சபாநாயகர் குரியன் தெரிவித்தார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி நேற்று மாநிலங்களவையில் பேசும்போது, தலித் இன மக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகள் பிரச்சினை குறித்து பேசினார். அவருக்கு 3 நிமிடத்துக்கு மேல் நீண்ட நேரம் பேச துணைத் தலைவர் பி.ஜே. சூரியன் அனுமதிக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த மாயாவதி, துணை சபாநாயகர் குரியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறிவிட்டு சபையில் இருந்து வெளியேறினார். பின்னர் அவர் அவைத்தலைவர் அமீத் அன்சாரியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

இதற்கிடையே, மாயாவதி தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. கடிதத்தில் ராஜினாமா தொடர்பான வாசகத்தை தவிர வேறு எதுவும் குறிப்பிடக்கூடாது. அப்படி குறிப்பிட்டால் தொழில்நுட்ப காரணங்களை காட்டி அந்த ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்படும்.

மாயாவதி தனது ராஜினாமா கடிதத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதால் அவரது ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், மாயாவதியின் ராஜினாமா தொடர்பாக மாநிலங்களவையில் இன்று துணை சபாநாயகர் குரியன் பேசினார். அப்போது, அவையின் நடைமுறைகள் மற்றும் நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கிய அவர், மாயாவதி தனது ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என மாநிலங்களவை விரும்புவதாக தெரிவித்தார்.

“மாயாவதி ராஜினாமா செய்ததால் நம்மில் யாரும் மகிழ்ச்சி அடையவில்லை. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இது தவறான புரிதல், அவ்வளவுதான். அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்த அவை கேட்டுக்கொள்ளும்” என்றார் குரியன்.

மாயாவதி தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி நாம் கேட்டுக்கொள்ள வேண்டும் என மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்தும் தெரிவித்தார்.

இதையடுத்து, மாயாவதி விஷயத்தில் மத்திய அரசின் நிலையை கூறும்படி பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வியிடம் துணை சபாநாயகர் கேட்டார். அவருக்கு பதிலளித்த நக்வி, அனைத்துக் கட்சிகளின் விருப்பம் அதுவாக இருந்தால் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார். எனவே, மாயாவதி சமாதானம் அடைந்து தனது ராஜினாமாவை திரும்ப பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.