செய்திகள்

அசாம் குடியுரிமை பட்டியல் விவகாரம்- திரிணாமுல் எதிர்ப்பால் மாநிலங்களவை இன்றும் முடங்கியது

அசாம் மாநில குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் நீக்கப்பட்டதை எதிர்த்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ், திரிணாமுல் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் முடங்கியது. #RajyaSabhaadjourned #AssamNRC

மாலை மலர்

அசாம் மாநிலத்தில் அசாமியர்களுடன், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும் பெரும் அளவில் வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் யார் அசாமியர், யார் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அசாமில் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தயாரிக்கப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதில் இந்தியர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரம் நேற்றும் இன்றும் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.

கோஷமிட்டவாறு சபாநாயகர் இருக்கையை நோக்கி சென்ற அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இன்று 12 மணி வரையிலும், பின்னர் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் அவை கூடியபோது, இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டு கொண்டார். இந்த பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக தொடர்ந்து மூன்று நாட்களாக மாநிலங்களவைக்கு வருகை தந்தமைக்காக ராஜ்நாத் சிங்குக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர் வெங்கையா நாயுடு அவரை பேச அனுமதித்தார்.