மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்களாக உள்ள ஏ.கே. செல்வராஜ், முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், சசிகலா புஷ்பா (இப்போது பா.ஜனதா உறுப்பினர்) ஆகியோரது பதவிக் காலம் வருகிற ஏப்ரல் 1-ந்தேதியுடன் முடிவடைகிறது. தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோரது பதவிக்காலமும் முடிவடைகிறது.
புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க மார்ச் 26-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் நான்காவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். மேலும், அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய மாநிலங்களவை எம்.பி.க்களை அந்தந்த மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பார்கள். தமிழகத்தில் 234 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர்.
இதில் அ.தி.மு.க.வுக்கு 125 எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு 100 எம்.எல்.ஏ.க்களும் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 7, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என 108 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன் சுயேச்சை எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
இதில் ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு வேண்டும். அந்த வகையில் அ.தி.மு.க. வில் இருந்து 3 எம்.பி.க்களும் தி.மு.க.வில் இருந்து 3 எம்.பி.க்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்க முடியும்.
இதனால் திமுக வேட்பாளர்கள் மூன்று பேரும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது எனத் தெரிகிறது.