டேராடூன்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 1,597 கிலோ மீட்டர் நீளத்துக்கும், இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் 200 கிலோ மீட்டர் நீளத்துக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 345 கிலோ மீட்டர் நீளத்துக்கும், சிக்கிம் மாநிலத்தில் 220 கிலோ மீட்டர் நீளத்துக்கும், அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் 1,126 கிலோ மீட்டர் நீளத்துக்கும், 3,488 கிலோ மீட்டர் நீளம் இந்தியா - சீனா எல்லைப்பகுதி அமைந்துள்ளது.
இந்த பகுதியை இந்தோ- திபெத்து எல்லைப் பாதுகாப்பு படையினர் அல்லும் பகலும் கண்ணயராது பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 11,700 அடி உயரத்தில், மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் உறைநிலை பனி பொழியும் இடமாக உள்ள நேலாங் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புத்தாண்டு தினத்தை கொண்டாடுகிறார்.
இதற்காக, இன்று மாலை பகீரதி நதிக்கரையின் ஓரம் சுமார் 3400 அடி உயரத்தில் உள்ள இந்தோ- திபெத்து எல்லைப் பாதுகாப்பு படையின் 12-வது படைப்பிரிவு முகாமுக்கு அவர் வருகிறார்.
இங்கு எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தார் நடத்தும் கலை நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். 8,700 அடி உயரத்தில் உள்ள கோபாங் முகாம், 9,150 அடி உயரத்தில் உள்ள பைரான் கட்டி முகாம் மற்றும் 14,200 அடி உயரத்தில் உள்ள புலாம் சும்தா முகாம் ஆகியவற்றுக்கு செல்லும் ராஜ்நாத் சிங் அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டோக்லாம் எல்லைப்பகுதியில் சீனா - இந்தியா இடையிலான மோதலுக்கு பின்னர் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இங்கு வருவது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews