செய்திகள்

மாநிலங்களவையில் ஒக்கி புயல் குறித்து அ.தி.மு.க எம்.பி பேச்சு - அமளியால் ஒத்திவைப்பு

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வரும் திங்கள் வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மாலை மலர்

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், நிலுவையில் உள்ள சில மசோதாக்களையும் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

மக்களவை தொடங்கியதும் புதிய மந்திரிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர், அவை வரும் திங்கள் வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

மாநிலங்களவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கள் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனையடுத்து, புதிய மந்திரிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி, பாகிஸ்தான் அதிகாரிகளுடன் மன்மோகன் சிங் சந்தித்தாக கூறப்பட்டது குறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், சபாநாயகர் வெங்கையா நாயுடு அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால், அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து, அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணனை பேச சபாநாயகர் அழைத்தார். அப்போது, அவர் ஒக்கி புயலால் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

அப்போது, சரத்யாதவ் தகுதி நீக்கம் தொடர்பாக சில உறுப்பினர்களும் பேச முயற்சித்ததால் மீண்டும் குழப்பம் நிலவியது. இதனையடுத்து, அவையை 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.