தமிழகத்தின் இரு பெரும் முன்னணி சினிமா நட்சத்திரங்களான கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் பிரச்சனைகளில் இருவரும் போட்டி போட்டு கருத்து தெரிவிக்கிறார்கள்.
கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை தொடங்கி நிர்வாகிகளை நியமித்து கட்சி உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.
இதுபோல ரஜினிகாந்தும் அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
3 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு தொண்டர்கள் சேர்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
கமல்ஹாசன் போல் ரஜினிகாந்தும் உடனடியாக அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதம் ஏற்பட்டது.
படப்பிடிப்புகள் முடிந்து இமயமலைக்கு சென்று ஓய்வு எடுத்து திரும்பிய நிலையில் இன்றிரவு அவர் அமெரிக்கா செல்கிறார். அங்கு சில நாட்கள் தங்கி மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளார். இதனால் அரசியல் கட்சி தொடங்கும் பணி தாமதமாகும் என தெரிகிறது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலவாறாக கருத்துக்கள் பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கான செயல்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளார்.
சென்னையில் வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) ராகவேந்திரா மண்டபத்தில் புதிய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இதில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. கட்சி பெயர், கொடி, கொள்கைகள் போன்றவற்றையும் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் மன்ற நிர்வாகிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மக்கள் மத்தியில் எந்த வகையில் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற விவரங்களை எடுத்துக்கூறுகிறார். மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிலவரங்களையும் நிர்வாகிகளிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்கிறார்.
பின்னர் ரஜினிகாந்த் நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கி பேசுகிறார். அப்போது கட்சியின் எதிர் கால செயல் திட்டங்கள் பற்றி அறிவிப்பு வெளியிடுகிறார். தற்போது அமெரிக்க செல்வதால் அங்கிருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் நிர்வாகிகளிடையே உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி மக்கள் மன்றத்துக்கு தனியாக இணைய தள செயலி (ஆப்) தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை ஏற்கனவே மன்றத்தின் கணினி பிரிவு நிர்வாகிகள் தொடங்கி விட்டனர். இதனை அறிமுகம் செய்வது பற்றியும் ரஜினிகாந்த் ஆலோசனை வழங்குகிறார்.
தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று அறிவித்த ரஜினிகாந்த்தின் கருத்துக்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும், பா.ஜனதாவின் கருத்துக்களையே பிரதிபலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இதற்கும் ரஜினி காந்த் விளக்கம் அளிக்க உள்ளார்.
ரஜினி மன்றத்துக்கு இதுவரை 20 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் மூலம் மாவட்டம் வாரியாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இவர்கள் ரஜினிகாந்த் மீதான அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கும், கருத்துக்களுக்கும் மக்களிடம் நேரடியாக பதில் அளிப்பார்கள். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கான நோக்கம், கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகள் பற்றியும் மக்களிடம் விளக்குவார்கள்.