செய்திகள்

எந்த திட்டமும், கொள்கையும் இல்லாதவர் ரஜினி: உதயகுமார் பாய்ச்சல்

ரஜினிகாந்த் எந்த திட்டமும், கொள்கையும் இல்லாதவர். நாங்கள் ரஜினியை கடுமையாக எதிர்க்கின்றோம் என்று கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.

மாலை மலர்

நெல்லை:

கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடங்குளம் அணுஉலை தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையில் முதல் இரண்டு அணு உலைகள் தரமற்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதைத்தான் நாங்கள் ஏற்கனவே கூறி வருகிறோம். நாங்கள் கூறியதை தான் இன்று தணிக்கை அறிக்கை கூறியுள்ளது. இதனடிப் படையில் எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நீக்க வேண்டும்.

எங்கள் பாஸ்போர்ட்டுகளை திருப்பி ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பாக கூடங்குளம் அதிகாரிகளிடம் விசாரிக்க வேண்டும். கூடங்குளத்தை சுற்றி 30 கிலோ மீட்டர் தொலைவில் எவ்வளவு மக்கள் வசிக்கிறார்கள் என்று கேட்டதற்கு மாவட்ட நிர்வாகத்தினர் அதை தர மறுக்கிறார்கள்.

இந்த தகவல் வெளிவந்தால் 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்ட முடியாது. உடனடியாக இந்த தகவலை கலெக்டர் வழங்க வேண்டும். இல்லையென்றால் மண்எண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்வோம். மேலும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

குமரி மாவட்டத்தில் இணையம் துறைமுக திட்டத்தை தற்போது பெயர் மாற்றி கன்னியாகுமரி சரக்கு பெட்டக திட்டம் என மாற்றியுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் கன்னியாகுமரி அழிவு பாதைக்கு செல்லும். குமரி மாவட்டத்தில் கீழமணக்குடியில் இன்று 3½ கிலோ மீட்டர் தூரத்தில் இதை அமைப்பதாக கூறியுள்ளனர்.

பொதுவாக 50 கோடிக்கு மேல் செலவிடும் எந்த திட்டத்திற்கும் மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என விதி உள்ளது. ஆனால் இங்குள்ள மக்களிடம் எந்த கருத்துக்களையும் கேட்கவில்லை. மாறாக குமரி மாவட்ட மக்களை சாதி, மத ரீதியாக பிளவு படுத்தி இத்திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.

நாங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று எங்களுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். குமரியை பொறுத்தவரை ஆண்டுக்கு 23 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதன் மூலம் சுற்றுலா துறை நலிவடையும்.

தமிழகத்தில் இன்றைய சூழ்நிலையில் மக்களை குழப்பும் நோக்கத்தில் சில நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள். ரஜினி எந்த திட்டமும், கொள்கையும் இல்லாதவர். அரசியலுக்கு வருபவர் இன்றே கட்சியை ஆரம்பிக்கலாம். அதை விடுத்து சட்டசபை தேர்தல் நேரத்தில் என்பது மக்களை குழப்பும் வேலை.

போயஸ் தோட்டத்தின் பிரம்மாண்டம் பாகம்-2 என்ற படம் எங்களுக்கு தேவையில்லை. தமிழக மக்கள் அவரை வரவேற்கவில்லை. அவரை வரவேற்பதாக கூறுபவர்கள் நடிக்கிறார்கள். நாங்கள் ரஜினியை கடுமையாக எதிர்க்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews