செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை: யார், என்ன சொல்கிறார்கள்?

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கூறும் கருத்துக்களை பார்ப்போம்.

மாலை மலர்

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து இருப்பது பற்றி அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தல் வரும்போது கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறி இருக்கிறார். புத்தாண்டில் அவரது படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்காக அவர் புதுவிதமாக கையாண்டு இருக்கும் விளம்பர யுக்திதான் இது என்றே நினைக்கிறேன். முழுமையாக அரசியலுக்கு வரட்டும். அப்போது பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:-

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. அரசியல் குறித்த அவரது அறிவிப்பை சில ஆண்டுகளாகவே பல்துறையைச் சேர்ந்தவர்கள் நியாயமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


ஜனநாயகத்திலே அரசியல் கட்சியை தொடங்குவதற்கும் அதன் சார்பிலே மக்களை சந்திப்பதற்கும் யாரும் இடையூறாக இருக்க முடியாது. மக்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட்டால் அங்கீகாரம் பெறலாம். ஆனால் பொது வாழ்க்கை என்று தேர்தலில் நிற்கும்போது இறுதியில் மக்கள் தான் எஜமானர்கள்.

ரஜினிகாந்தின் கட்சியின் முழு வடிவம் வெளிவர வேண்டும்; அதன் பிறகு அவர்கள் மக்கள் பணியையும், கட்சிப் பணியையும் தொடங்க வேண்டும். அது மக்களை சென்றடைய வேண்டும். தனது கட்சிக்கான கட்டமைப்புகளை சிறப்பாக ஏற்படுத்துவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யுனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-

ரஜினி புதிதாக எதுவும் சொல்லவில்லை. அரசியல் சீரழிவுகளை விமர்சித்து இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு அப்போது முடிவெடுப்பேன் என்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கட்சி தொடங்குவேன் என்கிறார். ஆன்மீக அரசியல் நடத்துவேன் என்கிறார். ஆன்மீகமும், அரசியலும் ஒன்றாக இருக்க முடியாது.

உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களோடு நேரடி தொடர்பு கொண்டது. ஆனால் அதில் போட்டியிட போவதில்லை என்று கூறிஇருக்கிறார்.

எங்களை பொறுத்தவரை அவரது அறிவிப்பு இன்றைய கூட்டத்தின் மூலம் ரசிகர்களை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கையாகவே கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

ரஜினிகாந்தின் அரசியல் வருகையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. மதவாத அரசியலாக இல்லாமல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை கஸ்தூரி ‘‘தலைவா... வா...வா...’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘அன்றைய ஓட்டப்பந்தய வீராங்கனை தங்க மங்கை பி.டி.உஷா இன்று ஓடினால் ஜெயிப்பது என்பது...?! இது வெறுப்பு அல்ல... நான் நிஜத்தை பேசுகிறேன். மற்றவை கடவுளின் கையில்” என்று குறிப்பிட்டுள்ளார்.