செய்திகள்

திருச்சியில் நாளை ரஜினி கட்சி நிர்வாகிகள் தேர்வு

திருச்சியில் நாளை ரஜினி கட்சி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெறுகிறது. ரஜினி கட்சியில் பதவிகளை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாலை மலர்

திருச்சி:

நடிகர் ரஜினிகாந்த் தொடங்கும் கட்சிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. முதலில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் மாநில மன்ற நிர்வாகிகள் சுதாகர், ராஜூ மகாலிங்கம் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.

இந்த நிலையில் தற்போது நிர்வாகிகள் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டு மாநில நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று நேர்காணல் நடத்தி பதவிகளை அறிவிக்கவுள்ளனர்.

அதன்படி புதுக்கோட்டை நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நாளை (7-ந்தேதி) காலை தஞ்சை - புதுக்கோட்டை ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திலும், தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டம் பழைய பால்பண்ணை அருகில் உள்ள திருமண மண்டபத்திலும் நடக்கிறது.

திருச்சி மாவட்டம் மாநகர், புறநகர், நகரம், ஒன்றியம், கோட்டம் என பிரிக்கப்பட்டுள்ளது. நாளை நகர ஒன்றிய கோட்ட நிர்வாகிகள் நேர்காணல் நடத்தப்பட்டு அறிவிக்கப்படுகிறார்கள்.

நேர்காணலின் போது மன்றத்தில் வகித்த பொறுப்பு, அரசியல் அனுபவம், மாவட்ட, தொகுதி, வார்டு வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விபரம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்படுகிறது.

அரசியல் அனுபவம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்கள் ஆவணங்களை கொடுப்பவர்கள் ஆகியோர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுகின்றது.

ரஜினி கட்சியில் பதவிகளை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட அளவிலான பதவிகளுக்கு ரஜினி மன்றத்தில் நீண்ட காலமாக மாவட்ட பதவிகளில் உள்ள கர்ணன், சுதர்சன், மன்னன் இளங்கோ, கலில், பகவான் விஜி, சபையர் முத்து உள்ளிட்டவர்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது.

எனவே மாவட்ட அளவிலான செயலாளர், தலைவர், பொருளாளர், அணிகள் ஆகியவற்றிற்கு சென்னைக்கு சென்ற பிறகு அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.