சென்னை:
புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்த ரஜினிகாந்த் அதற்கான அடித்தளத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
முதல்கட்டமாக தமிழகத்தில் உள்ள தனது 50 ஆயிரம் ரசிகர் மன்றங்களை "ரஜினி மக்கள் மன்றம்" என்று மாற்றி உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தினார்.
32 மாவட்டங்களிலும் உறுப்பினர்கள் சேர்க்கையை முடித்து, அடையாள அட்டையை வழங்கிய ரஜினி காந்த், அடுத்தக் கட்டமாக மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்தார். அதன் பிறகு கிளைக் கழக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக ரஜினி காந்த் ஏராளமான அறிவுரைகளை தனது மன்றத்தினருக்கு கூறியுள்ளார். அதுபற்றி ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் கூறி இருப்பதாவது:-
நிறைய இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டு பணியாற்ற ஆர்வமுடன் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைப்பதில்லை. குடும்ப அரசியலும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது.
எனவே தனது புதிய கட்சியில் குடும்ப அரசியலுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதில் தலைவர் ரஜினி உறுதியாக உள்ளார். அதன்படி எங்கள் கட்சியில் ஒரு குடும்பத்தினருக்கு ஒரு பதவியே வழங்கப்படும்.
தற்போதைய பாராளுமன்றத்தில் கூட 35 வயதுக்குட்பட்ட எம்.பி.க்கள் பற்றி ஆய்வு செய்தால் அவர்கள் அனைவரும் குடும்ப அரசியலில் இருந்து வந்தவர்களாகத்தான் உள்ளனர். எனவே தான் குடும்ப அரசியல் வந்து விடக்கூடாது என்பதில் தலைவர் உறுதியாக உள்ளார்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளில் பெண்கள், சிறுபான்மை இனத்தவர்கள் மற்றும் தலித் இன மக்களுக்கு அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுக்க தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்ப கட்சியின் உள் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகளை கூட கடந்த 2 மாதமாக கடும் சவால்களுக்கு இடையில்தான் நியமனம் செய்தோம்.
ஒரு மாவட்டத்தில் செயலாளராக தேர்வான ஒருவர் தனது மகனை இளைஞர் அணி மாவட்ட செயலாளராக கொண்டு வர விரும்பினார். அதற்கு நாங்கள் இடம் கொடுக்கவில்லை. இதே போன்று தான் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகள் நியமனம் செய்துள்ளோம்.
இதில் இனியும் சமரசத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம். திறமையான இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பும், மதிப்பும் கொடுப்போம். தற்போது மாநிலம் முழுவதும் புதிய நிர்வாகிகளின் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்னும் ஒரு மாதத்தில் கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகிகள் நியமனத்துக்கான அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்று விடும். அடுத்தக் கட்டமாக செயற்குழு உறுப்பினர்கள் ரஜினிகாந்துடன் சந்தித்துப் பேசுவார்கள்.
எங்கள் தலைவர் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். திரும்பி வந்ததும் அடுத்தக் கட்ட பணிகள் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் கூறியுள்ளார்.
புதிய கட்சி தொடங்கும் முன்பு சில பணிகளை முடிக்க திட்டமிட்ட ரஜினிகாந்த் முதலில் இமயமலைக்கு சென்றார். அந்த பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பி சற்று ஓய்வு எடுத்த அவர் தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
அமெரிக்காவில் 10 நாட்கள் தங்கி இருக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். அப்போது மருத்துவ பரிசோதனை செய்ய அவர் டாக்டர்களிடம் முன் அனுமதி பெற்றுள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்காக அவர் 2 நாட்கள் மட்டும் மருத்துவமனையில் தங்கி இருப்பார்.
மற்ற நாட்களில் அவர் அமெரிக்காவில் இருந்த படியே தனது புதிய கட்சிக்கான பணிகளில் ஈடுபடுவார் என்று தெரியவந்துள்ளது. தனது கட்சிக்கான இணைய தள கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பை அவர் அமெரிக்காவில் செய்து முடிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்காக அவர் தொழில் நுட்ப குழுவை சேர்ந்த சிலரை ஏற்கனவே அமெரிக்காவிற்கு அனுப்பி இருந்தார். அவர்களுடன் சேர்ந்து இணைய தள வடிவமைப்பு இறுதி கட்டத்தை எட்ட உள்ளது.
இதுதவிர கட்சியின் பெயர், கொடி, கொள்கை மற்றும் மாநாடு தொடர்பாகவும் ரஜினி ஆலோசித்து வருகிறார். அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் அவர் இந்த விவரங்கள் அனைத்தையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rajinikanth