சென்னை:
அரசியல் பயணத்தை தொடங்கி உள்ள நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் முழுவதும் தனது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தும் பணியை முடுக்கிவிட்டுள்ளார்.
ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். ரஜினி மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை கவனிப்பதற்கு 38 மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்கள் அனைத்துக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 27 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் 11 மாவட்டங்களுக்கு மட்டுமே நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர். இதே போல ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு விட்டனர்.
மாநில நிர்வாகிகளான ராஜூ மகாலிங்கம், சுதாகர் ஆகியோர் இதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இதற்கான தேர்வு நடைபெற்று வந்தது. இது நேற்றுடன் நிறைவு பெற்றது.
இதனை தொடர்ந்து ரஜினி புதிய கட்சியை விரைவில் அறிவிக்க உள்ளார். வருகிற 14-ந்தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சியின் பெயரை ரஜினி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இமயமலை பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும் ரஜினிகாந்த் இதனை மறுத்தார். அது போன்று எந்த திட்டமும் இல்லை என்று அவர் அறிவித்துவிட்டார்.
இருப்பினும் மே மாதம் ரஜினி புதிய கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது பற்றி ரஜினி தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
மாவட்ட நிர்வாகிகளை தொடர்ந்து கிளை கழக செயலாளர்களை நியமிக்க ரஜினி முடிவு செய்துள்ளார். மாவட்ட நிர்வாகிகள் கிளை செயலாளர்களை தேர்வு செய்து தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.