திமுக 
செய்திகள்

நெல்லை ரஜினி மக்கள் மன்றத்தினர் 50 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் 50 பேர் இளைஞரணி செயலாளர் தலைமையில் மன்றத்தில் இருந்து விலகி தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.

மாலை மலர்

நெல்லை:

சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெற உள்ளது.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதில் இதுவரை எந்தவிதமான முனைப்பும் காட்டவில்லை என்று கூறி அவரது ரசிகர்கள் விரக்தியில் இருந்து வந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அவரது பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது.

அதில் உடல் நலனை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபட போவதில்லை என்றும், அமைதியான சூழ்நிலையில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த அறிக்கை தன்னுடையது அல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இதனால் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை என்பதால் அவரது ரசிகர்கள் மாற்றுக்கட்சியில் இணைய முடிவு செய்தனர். இதற்காக கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஏற்கனவே சிலர் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் 50 பேர் இளைஞரணி செயலாளர் முகமது சசி தலைமையில் மன்றத்தில் இருந்து விலகி தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். இன்னும் பலர் தி.மு.க.வில் இணைய இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கட்சி தொடங்குவதில் ஏற்பட்டு வரும் தொடர் குழப்பம் காரணமாக தமிழகம் முழுவதிலும் ரஜினியின் ரசிகர்கள் ஏராளமானோர் ரசிகர் மன்றத்தில் இருந்து விலகி மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பி பணத்தை வாரி இறைத்த ஏராளமான அவரது ரசிகர்கள் தற்போது மாற்றுக்கட்சியில் அதிகமாக இணைந்து வருகின்றனர் என்று அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.