செய்திகள்

ரஜினி ரசிகர்கள் நாட்டுக்கு சேவை செய்ய தயாராக வேண்டும்: டைரக்டர் எஸ்.பி. முத்துராமன்

ரஜினி ரசிகர்கள் நாட்டுக்கு சேவை செய்ய தயாராக வேண்டும் என டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் கூறியுள்ளார்.

அரக்கோணம்:

அரக்கோணத்தில் தமிழ் படைப்பாளர் சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைமையக தொடக்க விழா நடந்தது. இதில் இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழ்ப் படைப்பாளர்கள் இயல், இசை, நாடகம் என தமிழின் மூன்று பக்கத்திலும் சேவை செய்பவர்கள். இவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு திரைப்படம் வெளி வந்தவுடன் நன்றாக உள்ளது, நன்றாக இல்லை என ஒரு வரியில் விமர்சனம் செய்துவிடலாம்.

ஆனால், ஒரு படம் தயாரிக்க தயாரிப்பாளர் முதல் கீழ் உள்ளவர்கள் வரை 23 துறையினர் ஒழுங்காகப் பணியாற்றினால் மட்டுமே சிறப்பான திரைப்படம் வெளிவரும். இவர்களையெல்லாம் ஒருமுகப்படுத்தி படத்தை வெளிவரச் செய்பவர் தான் இயக்குநர்.

ரஜினி ரசிகர்கள் மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய தயாராக வேண்டும். கமல் விஞ்ஞானி, ரஜினி மெய்ஞானி. இவர்களை வைத்து மட்டுமே 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வளவும் செய்த நான் எனது குடும்பத்தைப் பார்க்க தவறிவிட்டேன். இதனால் தான் இன்றைய தலைமுறையினரைக் கேட்டுக் கொள்கிறேன்.

குடும்பம், உறவு, நட்பு இவற்றுக்கு நேரம் ஒதுக்குங்கள். குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் உணவருந்துங்கள். வரவுக்கு மேல் செலவு செய்யாதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.