திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே தெருவை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ராஜஸ்தான் மந்திரி கிரண் மகேஸ்வரி. 
செய்திகள்

தமிழக அதிகாரிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை: ராஜஸ்தான் மந்திரி

ராஜஸ்தான் மாநிலத்தில் மாடுகளை லாரியில் ஏற்றி வரும்போது தமிழக அரசு அதிகாரிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில மந்திரி கிரண் மகேஸ்வரி கூறியுள்ளார்.

திருவண்ணாமலை:

பிரதமர் நரேந்திர மோடியின் 3 ஆண்டு சாதனை விளக்க கருத்தரங்கு நேற்று மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருவண்ணாமலையில் நடந்தது. மாநில சிறுபான்மை அணி தலைவர் ஆசாம்பாஷா தலைமை தாங்கினார். வேலூர் கோட்ட பொறுப்பாளர் பிரகாஷ், மாவட்ட தலைவர் நேரு, துணை தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக ராஜஸ்தான் மாநில உயர்கல்வித்துறை மந்திரி கிரண் மகேஸ்வரி கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி புரிந்த 3 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 3 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திரமோடி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எரிவாயு மானியம், விபத்து காப்பீடு, பயிர் காப்பீடு, விவசாய கடன், 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. ஆளும் அ.தி.மு.க. 3 பிரிவாக பிரிந்து காணப்படுகிறது. அமைச்சர்கள், ஆளும் எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை. மாறாக அவர்களின் நலனை கருத்தில் கொண்டே ஆட்சி செய்து வருகிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மாடுகளை லாரியில் ஏற்றி வரும்போது தமிழக அரசு அதிகாரிகள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜஸ்தான் உயர் கல்வி அமைச்சர் கிரண் மகேஸ்வரி இன்று காலை திருப்பத்தூர் வந்தார். அவரை பா.ஜனதாவினர் வரவேற்றனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் பஸ்நிலையம் அருகே உள்ள வி.சி.எம். தெருவில் உள்ள குப்பைகளை அள்ளி சுத்தம் செய்தார்.

பின்னர் பாவடி தோப்பு பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள 100 குடும்பங்களுக்கு பிளாஸ்டிக் பக்கெட்டுகளை வழங்கினார்.

அதில் மக்கும் குப்பை, மக்கா குப்பையை தனிதனியாக பிரித்து போட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து மோடி உத்தரவுபடி திருப்பத்தூர் கட்சி நிர்வாகி முத்துராமன் வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டார்.

சிற்றுண்டியை முடித்துக் கொண்டு திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்ற அவர் மாணவர்களுடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜஸ்தான் பள்ளிகளில் நாமோஸ் மந்திர் என்கிற கடவுள் வாழ்த்து பாடலை மாணவர்கள் படிப்பார்கள். அதே போன்றும் இங்கேயும் கடவுள் வாழ்த்து பாடலை பாடி வகுப்புகளை மாணவர்கள் தொடங்குகின்றனர்.

தூய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்கள் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் வீடு, தெருவை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க உதவ வேண்டும். நாட்டு வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது என்றார்.

இதில் வேலூர் கோட்ட பொருப்பாளர் பிரகாஷ், மாவட்ட தலைவர் வெங்கடே‌ஷன், திருப்பத்தூர் நகர தலைவர் அன்பழகன், மாவட்ட பொருப்பாளர் ஈஸ்வரன், மாவட்ட துணை தலைவர் கண்ணன், சிவசண்முகம் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.