ஈரானில் இருந்து இந்தியர்கள் வந்த விமானம் 
செய்திகள்

ஈரானில் மீட்கப்பட்ட மேலும் 53 இந்தியர்கள் வந்து சேர்ந்தனர்

கொரோனா தாக்கம் உள்ள ஈரான் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 53 இந்தியர்கள் இன்று ராஜஸ்தானுக்கு வந்து சேர்ந்தனர்.

மாலை மலர்

ஜெய்ப்பூர்:

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா தாக்கம் உள்ள நாடுகளில் உள்ள இந்தியர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர். அந்த வகையில் ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களில் 4வது குழுவினர் இன்று அங்கிருந்து தனி விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு கொரோனா குறித்து முதற்கட்ட ஸ்கிரீனிங் சோதனை செய்யப்பட்டது. அவர்கள் கொண்டு வந்த லக்கேஜ்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் ராணுவ நலவாழ்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

ஈரானின் தெஹ்ரான், ஷிராஜ் ஆகிய பகுதிகளில் இருந்து 52 மாணவர்கள், ஒரு ஆசிரியர் என மொத்தம் 53 பேர் இன்று வந்து சேர்ந்ததாகவும், இதன்மூலம் ஈரானில் இருந்து மொத்தம் 389 இந்தியர்கள்  நாடு திரும்பியிருப்பதாகவும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட தூதரக அதிகாரிகள் மற்றும் ஈரான் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.