இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அத்துடன் பாராளுமன்றத்தையும் முடக்கிய அவர், பின்னர் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலை தொடர்ந்து நவம்பர் 14-ம்தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார்.
இதற்கிடையே, பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அந்நாட்டின் பெரும்பான்மை பலமிக்க மூன்று பிரதான எதிர்க்கட்சிகள் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று கூறி அதிபரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.