மரணம் 
செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

ராஜாக்கமங்கலம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலத்தை அடுத்த வடக்கு சூரங்குடி கார்த்திகை வடலி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(வயது63). தொழிலாளி. இவருக்கு மேலச்சூரங்குடியில் தென்னந்தோப்பு உள்ளது.

இவர் நேற்று காலையில் மேலச் சூரங்குடியில் உள்ள தனது தோப்புக்கு தேங்காய் பறிப்பதற்காக சென்றிருந்தார். அங்குள்ள மரம் ஒன்றில் ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த செல்வராஜை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் காளிஸ்வரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.