விபத்து 
செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே உப்பளத்தில் கார் பாய்ந்தது- தனியார் நிறுவன மானேஜர் பலி

ராஜாக்கமங்கலம் அருகே விபத்தில் தனியார் நிறுவன மானேஜர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ராஜாக்கமங்கலம்:

நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ்டியன். இவரது மகன் ஆன்றோ எமலின் (வயது 32). என்ஜினீயரிங் பட்டதாரி.

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆன்றோ எமலின் மானேஜராக பணியாற்றி வந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு மீண்டும் பெங்களூரு செல்வதாக வீட்டில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆன்றோ எமலின் மற்றும் ராமன்புதூரை சேர்ந்த அவரது நண்பர்கள் ஆஸ்லின், அஸ்வின் ஆகியோர் ஒரு காரில் நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் நோக்கி சென்றனர்.

காரை ஆன்றோ எமலின் ஓட்டினார். பின் இருக்கையில் ஆஸ்லினும், அஸ்வினும் அமர்ந்திருந்தனர். கார் ராஜாக்கமங்கலம் அருகே பண்ணையூர் பகுதியில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்து தாறுமாறாக ஓடியது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகம் அருகே சென்ற போது சாலையோரம் உள்ள உப்பளத்தில் கார் பாய்ந்தது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. காரை ஓட்டி சென்ற ஆன்றோ எமலின் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவருடன் இருந்த நண்பர்கள் இருவரும் காயங்களுடன் அலறினர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் காருக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதில் ஆன்றோ எமலின் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. மற்ற இருவரும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இதையடுத்து காயம் அடைந்த அஸ்வின், ஆஸ்லின் இருவரையும் ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் ராஜாக்கமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த ஆன்றோ எமலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.