ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் அனைத்து கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. சார்பில் நடந்தது. இதில் அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:-
அடிக்கடி அணி மாறுவோருக்கு எந்தவித பதவியும் கொடுக்கக்கூடாது. அ.தி.மு.க. கறை வேட்டியை கட்டிக்கொண்டு தினகரன் அணியினர் அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.
என் மீது குறை சொல்லும் மோசமான நிர்வாகிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும். என்னை புரிந்து கொண்டவர்கள் எனக்கு உறுதுணையாக உள்ளனர்.
கூட்டுறவு சங்க தேர்தலில் தினகரன் அணி மனு தாக்கல் செய்வதை அ.தி.மு.க.வினர் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது:-
அ.தி.மு.க.வை யாராலும் எந்த காலத்திலும் வெல்ல முடியாது. கூட்டுறவு, உள்ளாட்சி என்று எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் நாம் உழைக்க வேண்டும்.
பிரித்தாளும் சூழ்ச்சி அரசியலுக்கு இடம் தராதீர்கள். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அ.தி.மு.க. வெற்றிக்கு மிகப் பெரிய சக்தியாக இருந்தனர்.
தற்போது அந்த நிலை இல்லை. எந்த பதவியிலும் தொண்டர்களே அ.தி.மு.க.வின் தூண்கள். மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு என்பது இல்லை.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது அந்தந்த மாநில ஆளும் கட்சியின் முடிவாகும். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அ.தி.மு.க. தனது நிலைப்பாட்டை சிறப்பாக நிறைவேற்றி உள்ளது.
தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு அ.தி.மு.க. அரசு இணக்கமாக செயல் படுவதை எதிர் கட்சிகள் தவறாக பிரசாரம் செய்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் தர்வேஸ் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நகர செயலாளர் அங்குச்சாமி, துணை செயலாளர் ஆரிப் ராஜா, மண்டபம் ஒன்றிய செயலாளர் தங்கமரைக் காயர், நகர செயலாளர் சீமான் மரைக்காயர், பொதுக்குழு உறுப்பினர் நந்திவர்மன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் சாமிநாதன், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் பால் பாண்டியன், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், கீழக்கரை நகர செயலாளர் ராஜேந்திரன், ராமநாதபுரம் தொகுதி முன்னாள் இணை செயலாளர் தஞ்சிசுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.