கொலை 
செய்திகள்

ராஜாக்கமங்கலம் துறையில் குடிபோதையில் மோதல்- மீனவர் குத்திக்கொலை

குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் மீனவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணன்-தம்பி உள்பட 4 பேரை கைது செய்தனர்.

மாலை மலர்

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலத்தை அடுத்த ராஜாக்கமங்கலம் துறை சவேரியார் தெருவை சேர்ந்தவர்கள் அருள்தாசன் (வயது59), பிரகாஷ்(44). இவர்கள் இருவரும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

நண்பர்களாக பழகி வந்த அவர்கள் இருவரும் நேற்று இரவு ராஜாக்கமங்கலம் துறை கடற்கரையில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது சவேரியார் தெருவை சேர்ந்த சில பெண்களை பற்றி பிரகாஷ் தவறாக பேசியதாக தெரிகிறது.

இதனால் அவரை அருள்தாசன் கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அருள்தாசன் தாக்கியதை அடுத்து பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அவர்கள் இருவரும் தகராறில் ஈடுபட்ட போது, அந்த இடத்தில் சிலுவை என்பவரின் மகன்கள் ராஜன்(55), ஜாண்சன்(52), ராஜனின் மருமகன்கள் சோரிஸ் ஜாண்(34), நெஸ்கோ(34) ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அவர்களும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

அவர்களிடம் தன்னிடம் பிரகாஷ் தகராறு செய்யும் போது ஏன் தட்டிகேட்க வில்லை என அருள்தாசன் கேட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அவரது தம்பி தேவதாசன்(55) என்பவரும் பேசி உள்ளார். இதையடுத்து அருள்தாசன் மற்றும் தேவதாசனுக்கும், ராஜன் உள்ளிட்ட 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

அப்போது ஆத்திர மடைந்த ராஜன் கத்தியால் அருள்தாசனை குத்தினார். மேலும் ஜாண்சன் உள்ளிட்ட 3 பேரும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். அவர்களை தடுத்த அருள்தாசனின் 2 மகன்கள் மற்றும் தம்பி தேவதாசன் ஆகியோரும் தாக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலில் அருள்தாசன், தேவதாசன் ஆகிய இருவருக்கும் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அருள்தாசன் பரிதாபமாக இறந்தார்.

அவரது தம்பி தேவதாசன் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அருள்தாசன் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அவர்கள் மோதல் மற்றும் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அருள்தாசன் கொலை தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து ராஜன், ஜாண்சன், ஜோரிஸ் ஜாண், நெஸ்கோ ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் நடந்த மோதலில் மீனவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜாக்கமங்கலம் துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு மோதல் சம்பவம் நடக்காமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.