தலையணை 
செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் - களக்காடு தலையணையில் மீண்டும் தண்ணீர் வரத்து

மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் களக்காடு தலையணையில் மீண்டும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. வனத்துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி ஓடுவதாலும், அதில் குளுமை அதிகம் என்பதாலும் தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினசரி உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கோடை வெயிலால் ஏற்பட்ட வறட்சி காரணமாக கடந்த இரு மாதங்களாக தலையணை தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தது. இது சுற்றுலா பயணிகளிடையே கவலையை கொடுத்தது. இதனிடையே கடந்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்ததால் வறண்டு கிடந்த தலையணையில் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. மிதமான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. ஆனால் சாரல் மழை நீடிக்காததாலும், தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும் சில நாட்களிலேயே தலையணை தண்ணீர் இன்றி வறண்டது. வறட்சி நீடித்ததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி தலையணை வெறிச்சோடி காட்சி அளித்தது.

இதனிடையே கடந்த சில நாட்களாக களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையின் உள்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதையொட்டி வறண்டு கிடந்த தலையணையில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. தடுப்பணையை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. மிதமான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் வருகையும் தொடங்கி உள்ளது.

இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில், வனசரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.