தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நகர்ப்புறங்களில் ஒருசில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து மெதுவாக இருந்தது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் வானிலை சீரற்ற நிலையில் இருப்பதால் இன்று காலையில் விமானங்கள் தாமதமாக வந்து சென்றன.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலத்தில் மட்டும் இன்று குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.