மழை நிலவரம் 
செய்திகள்

கேரளாவில் மழை நீடிப்பு - 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவின் 12 மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மலையோர கிராமங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மலை கிராமங்களில் உள்ள மக்கள் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு அறிவுறுத்தி உள்ளது. இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டுமென்றும் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் வங்க கடலின் ஆந்திர கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக கேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கேரளாவின் 12 மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்பட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுபோல கேரள கடலிலும் பலத்த காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது. அலைகள் சீற்றத்துடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.