செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை - 40 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் 40 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று 6-வது நாளாக தொடர் மழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகலில் விட்டு விட்டு மழை பெய்தது. இரவில் ஒருசில இடங்களில பலத்த மழை பெய்தது. தஞ்சையில் இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.

தற்போது விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். சம்பா பயிர் வளர்ந்து வரும் நிலையில் தொடர் மழை பெய்து வருவதால் கும்பகோணம், பட்டீஸ்வரம் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. கும்பகோணம், பாபநாசம், பூதலூர், அய்யம்பேட்டை உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்றும் மழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. திருவாரூர், மன்னார்குடி, திருதுறைப்பூண்டி, நன்னிலம், பேரளம் ஆகிய இடங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சி தருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

நாகை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 160 மி.மீ மழையும், தலைஞாயிறில் 270.4 மி.மீ மழையும் பெய்துள்ளது. இந்த மழை காரணமாக 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் மழையில் மூழ்கி உள்ளன. இந்த மழை மேலும் நீடித்தால் பயிர்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தற்போது சம்பா பயிர்களை காப்பாற்ற மழை நீரை வடியவைத்து வருகின்றனர். ஆனால் மழை பெய்து வருவதால் மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழையால் நாகை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.

நாகையில் கடல் சீற்றமாக உள்ளதால் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. ஆயிரக்கணக்கான படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. கோடியக்கரையை சேர்ந்த ஜீவா, கலைச்செல்வி ஆகியோருக்கு சொந்தமான 2 பசுமாடுகள் குளிரை தாங்க முடியாமல் இறந்தன.

தரங்கம்பாடி பகுதியிலும் மழை பெய்து வருவதால் சுற்றுலா தலமான டேனிஸ் கோட்டை முன்பு மழை வெள்ளம் குளம் போல் தேங்கி உள்ளது. உப்பனாற்றில் ஏற்பட்ட வெள்ளம் கரை உடைந்து தரங்கம் பாடியில் உள்ள படகு கட்டும் தொழிலகத்திற்குள் புகுந்தது. இதனால் அங்கு பணி செய்ய முடியாமல் தொழிலகம் மூடப்பட்டது.

சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் ஆகிய இடங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. பழையாறு, திருமுல்லைவாசல், தொடுவாய், கொட்டாயமேடு, புதுப்பட்டினம், பூம்புகார், வானகிரி ஆகிய இடங்களில் உள்ள 4 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சீர்காழி, செம்மங்குடி, கொண்டல், வைத்திஸ்வரன் கோவில் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. சீர்காழியில் கோவிந்தராஜ நகர், ஈசானிய தெரு, தெட்சிணாமூர்த்தி நகர் உள்பட தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

SCROLL FOR NEXT