செய்திகள்

நீண்டகால விடுப்பில் இருக்கும் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ய ரயில்வே மந்திரி உத்தரவு

ரெயில்வே ஊழியர்கள் நீண்டகால விடுப்பில் இருந்தால் பணிநீக்கம் செய்ய மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமை இந்தியன் ரெயில்வேக்கு உண்டு. மேலும், இந்தியன் ரெயில்வே நிறுவனம் பல லட்சம் ஊழியர்களைக் கொண்ட பெருமைக்குரியது.

இந்நிலையில், இந்தியன் ரெயில்வேயில் 13 லட்சம் ஊழியர்களில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் நீண்ட காலமாக விடுப்பில் சென்று இருப்பதை ரெயில்வே நிர்வாகம் சமீபத்தில் கண்டறிந்துள்ளது.

இதையடுத்து, தகுந்த காரணமின்றி நீண்ட நாள் விடுப்பில் இருக்கும் ரெயில்வே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறுகையில், காரணமின்றி நீண்டகால விடுப்பில் இருக்கும் ரெயில்வே ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். ரெயில்வே ஊழியர்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.