சென்னை:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜூன் 30-ந் தேதி வரையிலான பயணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு திருப்பி அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், கவுண்டர்களில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கு ஏதுவாக சென்னை கோட்டத்தில் உள்ள 19 முன்பதிவு மையங்கள் நாளை முதல் செயல்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, மயிலாப்பூர், மாம்பலம், செயின்ட் தாமஸ் மவுன்ட், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாலாஜாபாத் சாலை, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய முன்பதிவு மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை கொடுத்து கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.