திண்டுக்கல்:
பொள்ளாச்சி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில் தண்டவாளத்தில் ஜல்லிக்கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது. அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் நடக்கவில்லை. ரெயில்வே போலீசார் உரியநேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டனர்.
விசாரணையில் வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் தண்டவாளத்தில் கற்களை வைத்து விளையாடியது தெரிந்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் திண்டுக்கல், பழநி , கொடைரோடு பகுதிகளில் பொதுமக்கள், பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் ரெயில் நிலையத்தைபொறுத்தவரை தென்மாவட்ட ரெயில் போக்குவரத்துக்கு மையப்பகுதியாக திகழ்கிறது. இந்த ரெயில் நிலையத்துக்கு சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர், இண்டர்சிட்டி உட்பட 70-க்கும் மேற்பட்ட முறை ரெயில்கள் வந்து செல்கின்றன. தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் பாதுகாப்பை வலியுறுத்தி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சார்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
தண்டவாளத்தில் கல், கட்டைகள் வைப்பது குற்றம். மது போதையில் வாலிபர்கள், மாணவர்கள் விளையாட்டாக ரெயில் மீது கல், கட்டை, பாட்டில்களை வீசுவதால் பயணிகளுக்கு காயம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ரெயில்மீது கல் வீசினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை உண்டு.
தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள், கட்டைகள் வைத்தால் ரெயில் கவிழ வாய்ப்புள்ளது. எனவே, விளையாட்டாக கூட தண்டவாளத்தில் கல் வைத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை உண்டு. இது குறித்து மாணவர்கள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக ரெயில் வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் தெரிவித்தார்.