செய்திகள்

ரெயில்வே ஓட்டல் ஊழல் வழக்கு: தேஜஸ்வி யாதவ் இன்று சி.பி.ஜ. விசாரணைக்கு ஆஜரானார்

ரெயில்வே ஓட்டல் ஊழல் வழக்கு விசாரணைக்காக பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் சி.பி.ஐ. தலைமையகத்தில் இன்று ஆஜரானார்

மாலை மலர்

புதுடெல்லி:

பீகார் முன்னாள் முதல்- மந்திரி லல்லு பிரசாத் யாதவ். ராஷ்டீரிய ஜனதா தள தலைவரான இவர் 2004 முதல் 2009 வரை மத்திய ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார்.

2006-ம் ஆண்டில் அவரது பதவிக் காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமாக பூரி மற்றும் ராஞ்சியில் இருந்த 2 ஓட்டல்கள் தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்திய ரெயில்வே மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) கட்டுப்பாட்டில் இருந்த இந்த இரண்டு ஓட்டல்களின் நிர்வாக உரிமை சுஜாதா ஓட்டல் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு லஞ்சமாக பீகாரில் 3 ஏக்கர் நிலத்தை பினாமி கம்பெனியில் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லல்லுபிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. கடந்த ஜூலை 7-ந்தேதி வழக்கு பதிவு செய்து இருந்தது.

இந்த வழக்கில் லல்லு பிரசாத் யாதவ், தேஜஸ்வி ஆகியோர் ஆஜராக சி.பி.ஐ. ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இருவரும் ஆஜராகாமல் அவகாசம் கேட்டு இருந்தனர். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 5-ந்தேதி லல்லு பிரசாத் யாதவும், 6-ந்தேதி தேஜஸ்வியும் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. புதிய தேதியை அறிவித்து உத்தரவிட்டது. அதன்படி, நேற்று லல்லு பிரசாத் சி.பி.ஐ. தலைமையகத்தில் ஆஜராகி, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, இன்று காலை தேஜஸ்வி யாதவ் சி.பி.ஐ. தலைமையகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.