போராட்டம் 
செய்திகள்

ரெயில்வே ஆஸ்பத்திரி முன்பு தொழிற்சங்கத்தினர் திடீர் போராட்டம்

மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரி முன்பு தொழிற்சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரியில் ஊழியர்கள், அதிகாரிகளுக்காக கொரோனா சிகிச்சை வார்டு தொடங்கப்பட்டது. ஆனால், இந்த வார்டுகளுக்கு தமிழக அரசின் சுகாதாரத்துறை அனுமதி வழங்காததால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரெயில்வே ஊழியர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதற்கிடையே, தமிழக சுகாதாரத்துறை ரெயில்வே ஆஸ்பத்திரியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வார்டை கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது. அங்கு போலீசாருக்கு மட்டும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட போலீசார் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரெயில்வே பணியாளர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையே, நேற்று சிகிச்சைக்காக வந்த ரெயில்வே பணியாளரின் மனைவியை போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு வற்புறுத்தினர். ஆனால், அவர் அங்கு செல்ல மறுத்துவிட்டார்.

இதையறிந்த ரெயில்வே தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் ரெயில்வே ஆஸ்பத்திரி முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ரெயில்வே ஆஸ்பத்திரி கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளரின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டனர். அதன்பிறகே, ரெயில்வே ஊழியரின் மனைவி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரெயில்வே பணியாளர்களுக்கே ரெயில்வே ஆஸ்பத்திரியில் சிகிச்சை மறுக்கப்படுவதற்கு காரணம் என்னவென்று தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.