செய்திகள்

சைக்கிளில் பயணம், மாட்டு வண்டியில் பிரசாரம் - கர்நாடகத்தை கலக்கும் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று சைக்கிளில் சென்று மாட்டு வண்டியின் மீது நின்று பிரசாரம் செய்தார். #Rahulgandhi #karnatakaelection2018

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்து வருகிறார். நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி இன்று சைக்கிளில் சென்று மாட்டு வண்டியின் மீது நின்று பிரசாரம் செய்தார்.  

பெங்களூருவிலிருந்து ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ராகுல், சிறிது தூரம் பேருந்தில் பயணம் செய்தார். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து ஆயிரக்கணக்கான மக்கள் ராகுல் பிரசாரத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் இணைந்து ராகுல் சிறிது தூரம் சைக்கிளில் சென்றார். இதில் வெற்று கேஸ் சிலிண்டர்களுடன் பெண்களும் கலந்து கொண்டனர்.


அதன்பின் மாட்டு வண்டியில் நின்றபடி ராகுல் காந்தி பேசியதாவது:-

பொய்யான பிரசாரங்களை செய்வதற்காக மட்டுமே மோடி கர்நாடக மாநிலத்துக்கு வருகிறார். கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் ஒன்றை கூட கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றாமல் போன மத்திய அரசின் செயல்பாட்டை குறித்து மோடி வாய் திறக்காமல் போவது ஏன்?

ஒருபுறம் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் தப்பிக்க விடுவதுடன், மறுபுறம் தேசத்தின் வளங்களை சுரண்டிய ரெட்டி சகோதரர்கள் போன்றவர்களுக்கு சட்டசபையில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள்.

 
கடந்த 2008-13 வரை இங்கு நடைபெற்ற எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசின் தோல்விகள் தொடர்பாகவும், அடிக்கடி முதல் மந்திரிகள் மாற்றப்பட்டது குறித்தும் இம்மாநிலத்தின் முதல் முறையாக ஊழல் வழக்கில் சிறை சென்ற முதல் மந்திரி எடியூரப்பா பற்றியும் உங்களது தேர்தல் பிரசாரத்தின் போது நீங்கள் குறிப்பிடாமல் இருப்பது ஏன்?

இவ்வாறு ராகுல் பேசினார். #karnatakaelection2018 #Rahulgandhi

SCROLL FOR NEXT