காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று சென்னை வந்தார்.
தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற வைரவிழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக தி.மு.க செயல் தலைவர் மு. க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவர் அளித்த தேனீர் விருந்தில் கலந்து கொண்டார். மு.க.ஸ்டாலின் பேரப்பிள்ளைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுல் காந்தி சாந்தோம் எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.
இன்று காலை ராகுல் காந்தி ஓட்டலில் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் 8 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் 40 நிமிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக அரசியல் கட்சி நிலவரம் பற்றி கேட்டறிந்தார். கட்சி வளர்ச்சிக்கு எப்படி பணியாற்றினால் நன்றாக இருக்கும் என்றும் கேட்டார். தற்போதைய ஆட்சி பற்றியும் கேட்டறிந்தார்.
அதற்கு எம்.எல்.ஏ.க்கள் அளித்த கருத்துக்களை கவனத்துடன் கேட்டுக்கொண்டார்.
இப்போது தமிழ்நாட்டில் உள்ள சூழ்நிலை காங்கிரசுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து ராகுல் காந்தியை புதுவை முதல்-அமைச்சர் நாராயண சாமி மற்றும் புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சந்தித்து புதுவை மாநில நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
அதன் பிறகு ராகுல் காந்தி கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
பின்னர் ராகுல் காந்தி சத்யமூர்த்தி பவனுக்கு மதியம் 12.37 மணிக்கு வந்தார். அங்கு அவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
அங்கு காங்கிரஸ் கொடி ஏற்றி வைத்து காமராஜர் சிலைக்கும், தீரர் சத்யமூர்த்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து சேவாதள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் சேவாதள தொண்டர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டார்.
சத்யமூர்த்தி பவனில் அமைக்கப்பட்டுள்ள இந்திராகாந்தி நினைவு நூலகத்தையும் திறந்து வைத்தார்.
தொடர்ந்து சத்யமூர்த்தி பவன் கூட்ட அரங்கில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் முன்னாள் மாநில தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 268 பேர் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழக அரசியல் நிலவரம் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசனை நடத்தினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் சின்னா, ரெட்டி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் மாநில தலைவர்கள் குமரி அனந்தன், இளங்கோவன், கிருஷ்ணசாமி, அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொது செயலாளர் நடிகை நக்மா, கார்த்திக் சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், விஸ்வநாதன், மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, நாசே ராமச்சந்திரன், செல்வப் பெருந்தகை, கோபண்ணா, சிரஞ்சீவி, நாசே ராஜேஷ், ஹசீனா சையத், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, வசந்தகுமார், கே.ஆர்.ராமசாமி, ராஜேஷ்குமார்.
மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம், ராயபுரம், மனோகர், வி.ஆர். சிவராமன், மற்றும் நிர்வாகிகள், தி.நகர் ஸ்ரீராம், ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன், எம்.எஸ் திரவியம், வக்கீல் சிவராஜன் சேகரன் விக்டரி ஜெயக்குமார், அருள் பெத்தையா, கீழானூர் ராஜேந்திரன், சித்ரா கிருஷ்ணன், நாச்சிகுளம் சரவணன், கோடம்பாக்கம் ராஜசேகர்.
ராகுல்காந்தி கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனுக்கு வருகை தந்தார். அதன் பிறகு அவர் பலமுறை தமிழகத்துக்கு வந்தபோதும் சத்திய மூர்த்தி பவனுக்கு வந்தது இல்லை.
6 ஆண்டுகளுக்கு பின் அவர் சத்தியமூர்த்தி பவன் வந்ததால் காங்கிரசார் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணா சாலையில் இருந்து சத்தியமூர்த்தி பவன் செல்லும் ஜி.பி. ரோடு முழுவதும் ஏராளமான பேனர்கள் மற்றும் கொடி தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.