செய்திகள்

3½ ஆண்டுகளில் மோடி செயல்படுத்த முடியாததை நாங்கள் 6 மாதத்தில் செய்து முடிப்போம்: ராகுல்

3½ ஆண்டு ஆட்சியில் இருந்தும் மோடி செயல்படுத்த முடியாததை நாங்கள் 6 மாதத்தில் செய்து முடிப்போம் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

அமேதி:

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தனது சொந்த தொகுதியான அமேதியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 2-வது நாளாக தொகுதியில் சுற்றுப்பயணம் செய்த அவர் அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியதாவது:-

அமேதி தொகுதியில் காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் அதே திட்டங்களை இப்போது புதிதாக கொண்டுவந்தது போல பாரதிய ஜனதா அரசு காட்டிக்கொள்கிறது.

வருகிற 10-ந்தேதி கட்சித்தலைவர் அமித்ஷா, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய மந்திரி ஸ்மிருதிராணி ஆகியோர் இந்த தொகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இவை அனைத்துமே நாங்கள் கொண்டுவந்தது தான்.

ரூ.90 கோடி ஆஸ்பத்திரி, எப்.எம். ரேடியோ, சைனிக் பள்ளி, மேலாண்மை கல்லூரி ஆகிய திட்டங்கள் எல்லாமே நாங்கள் கொண்டு வந்தது. அதை மறுபடியும் தொடங்குவதுபோல காட்டிக் கொள்கிறார்கள். இருந்தாலும் நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை பாரதிய ஜனதா அரசு நிறைவேற்ற முயற்சிப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 3½ ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் 1½ ஆண்டு தான் மீதம் உள்ளது. அவரால் எதிலும் சிறப்பாக செயல்பட முடியவில்லை. வேலை வாய்ப்பு, விவசாயிகள் நலத்திட்டங்கள் போன்றவற்றை அவரால் உருவாக்க முடியவில்லை.

இளைஞர்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியவில்லை. இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சினை இன்று முக்கியமான ஒன்றாக உள்ளது. 3½ ஆண்டு காலத்தில் இதற்கு மோடியால் தீர்வுகாண முடியவில்லை. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 6 மாத காலத்துக்குள் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவோம்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.