தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் உள்ள உழவர் சந்தையில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, திருச்சி தொகுதி பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பேசியதாவது:
இந்த திருச்சி திமுகவின் எஃகு கோட்டை. திருச்சியில் தான் பல்வேறு சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்தியில் ஆளும் மோடியின் சர்வாதிகார ஆட்சியினையும், மாநிலத்தில் ஆளும் உதவாக்கரை எடப்பாடி ஆட்சியினையும் பற்றி ஒரு சில வரிகள் கூறவிரும்புகிறேன். அப்போதெல்லாம் வங்கியில் கொள்ளை அடிப்பார்கள். இப்போது வங்கியையே கொள்ளை அடிக்கிறார்கள். அப்போதெல்லாம் கோமாளிகள் சர்க்கஸில் இருப்பார்கள். இப்போது சர்காரிலேயே இருக்கிறார்கள்.
மேலும் பாஜக தேர்தல் அறிக்கை முரண்பாட்டின் மொத்த உருவம். ஆனால் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஏழை மக்களுக்கானது. விவசாய கடன் கட்ட முடியாதவர்கள் மீது குற்ற வழக்கு போடப்படாது. பிரதமராக வரக்கூடிய ராகுல் காந்தி அவர்கள், ரபேல் ஊழலை சிறிதும் பயமின்றி முதலில் பேசினார். அதற்கான ஆதாரங்கள் புத்தகமாகவே வெளியிடப்பட்டது.
மாநிலத்தில் சுய ஆட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதே திமுகவின் கொள்கை. தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் எடப்பாடியின் வாழ்க்கையே கிழியப்போகிறது. பாஜகவின் சேவகர்களாக அதிமுக உள்ளது. இவர்களுக்கு விடை கொடுக்க வேண்டும்.
ராகுல் காந்தி மன்னர் குடும்பம் என கூறுகிறீர்கள். ஆனால் ஆரம்பகால கட்டத்தில் ஏழையாக இருந்த நீங்கள் , ஏழைகள் பற்றி யோசித்தீர்களா? கார்ப்பரேட்களுக்கு தான் மோடி காவலாளி. பணமதிப்பிழப்பை தன்னிச்சையாக அறிவித்த சர்வாதிகாரி மோடி.