செய்திகள்

அடுத்த மாதம் உள்கட்சி தேர்தல்: ராகுல்காந்தி செப்டம்பரில் காங்கிரஸ் தலைவராகிறார்

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த மாதம் முதல் உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், செம்படம்பரில் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.

மாலை மலர்

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியில் சோனியா தலைவராகவும், அவரது மகன் ராகுல் துணைத் தலைவராகவும் இருக்கிறார்கள். சோனியாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு நீடிப்பதால் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ராகுலை தலைவராக தேர்வு செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் அதிருப்தி தெரிவித்தனர். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை ராகுலை முன் நிறுத்தி எதிர்கொண்டால் காங்கிரசுக்கு தோல்விதான் ஏற்படும் என்று அவர்கள் விமர்சனம் செய்தனர்.

ராகுல்காந்தி மேற்கொள்ளும் பிரசாரங்கள் எடுபடாத காரணத்தாலும் அவர் தீவிர அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்றும் கூறப்பட்டது. ராகுலுக்கு பதில் அவரது சகோதரி பிரியங்கா வந்தால் பா.ஜ.க.வுக்கு சவால் அளிக்க முடியும் என்றும் கருத்துக்கள் வெளியானது.

இதற்கிடையே ராகுலின் செயல்பாடுகள் தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரும் கூறி இருந்தனர். சோனியாவிடம் பேசுவது போல ராகுலிடம் பேச இயலவில்லை என்று அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

எனவே ராகுல் காங்கிரஸ் தலைவர் ஆவது தள்ளிப் போகும் என்று சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. ஆனால் சோனியாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தலைவர் பதவியை விரைவில் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த மாதம் முதல் உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பரில் அகில இந்திய தலைவர்கள் தேர்தல் நடைபெறும்.

அப்போது ராகுலை ஏகமனதாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்வார்கள் என்று தெரிகிறது. அதே சமயத்தில் பாராளுமன்ற குழு தலைவர் பதவியை சோனியா தன் வசம் வைத்திருப்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.