செய்திகள்

கேரளாவில் பழங்குடியின வாலிபர் அடித்துக் கொலை - ராகுல் கவலை

கேரளாவில் பழங்குடியின வாலிபரை திருடன் என நினைத்து பொதுமக்கள் அடித்து கொலை செய்த சம்பவம் வேதனை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் அட்டப்பாடியை அடுத்த முக்காலி கிராமத்தைச் சேர்ந்தவர் மது, (வயது 27). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஆதிவாசி இனத்தை சேர்ந்த மது அப்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் வசித்து வந்தார். அடிக்கடி கிராமத்திற்கு சென்று உணவு பொருட்கள் வாங்கி செல்வார்.

நேற்று முன்தினம் கிராமத்திற்கு சென்று உணவு பொருட்கள் மற்றும் அரிசி வாங்கி விட்டு காட்டுப்பகுதிக்கு சென்றபோது திருடன் என நினைத்து அவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து கொலை செய்தனர். இதுதொடர்பாக முக்காலி கிராமத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுவை தாக்கியபோது செல்பி எடுத்து சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இது வைரலாகப் பரவிய நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கு பலர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மதுவின் மரணத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று பாலக்காடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பழங்குடியின வாலிபர் அடித்துக்கொல்லப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கவலையும் வேதனையும் தெரிவித்துள்ளார்.

‘கேரளாவில் பழங்குடியின வாலிபர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதையும், அந்த சம்பவத்தை கேமராவில் படம்பிடித்து வெளியிட்டதையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். நமது சமூகத்தில் மேலோங்கி வரும் சகிப்புத்தன்மையின்மையை எதிர்த்து நாம் அரணாக நிற்க வேண்டும். மிருகத்தனமான இதுபோன்ற வன்முறையை கண்டித்து நாம் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்’ என ராகுல் டுவிட் செய்துள்ளார். #tamilnews