ராதா விஸ்வநாதன் 
செய்திகள்

பெங்களூருவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள் ராதா விஸ்வநாதன் மரணம்

பெங்களூருவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகளும், பாடகியுமான ராதா விஸ்வநாதன் மரணம் அடைந்தார். #RadhaVishwanathan #MSSubbulakshmi

பெங்களூரு:

‘பாரத ரத்னா’ விருது பெற்ற பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி. இவர் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். அவருடைய மகள் ராதா விஸ்வநாதன். பெங்களூருவில் வசித்து வந்த இவர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு 11.50 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 83.

அவருடைய தாயாரான எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும்போது, மகள் ராதா விஸ்வநாதன் உடன் செல்வார். ராதா விஸ்வநாதன் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். அவருக்கு சந்திரசேகர், சீனிவாசன் என்கிற 2 மகன்களும், சுப்புலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

சீனிவாசனின் மனைவி கீதா கூறுகையில், “எனது மாமியாருக்கு குளிர்காலத்தில் எப்போதும் நெஞ்சில் சளி சேர்ந்து பாதிக்கப்படுவார். இந்த முறை இது அதிகரித்துவிட்டது. நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு 11.50 மணியளவில் அவர் மரணம் அடைந்தார்” என்றார்.

மகன் சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 36 ஆண்டுகளாக எனது தாயார் உடல் ரீதியாக பிரச்சினை இருந்தாலும் அதை எதிர்த்து போராடினார். அவர் எப்போதும் உடல் வலியை எங்களிடம் கூறியது இல்லை. அவரிடம் இருந்து நாங்கள் நிறைய கற்று இருக்கிறோம். அவர் பாடிய வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாம, பஜ கோவிந்தம் பக்தி பாடல்கள் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான கோவில்கள், வீடுகளில் இன்றும் ஒலிக்கிறது. அவருடைய குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்” என்று குறிப்பிட்டு உள்ளார். #RadhaVishwanathan #MSSubbulakshmi  #tamilnews

SCROLL FOR NEXT