ஐஸ்வர்யா, தேஜ் பிரதாப் மற்றும் ராப்ரி தேவி 
செய்திகள்

லாலு மனைவி ராப்ரிதேவி மீது மருமகள் பரபரப்பு குற்றச்சாட்டு

பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேவி மீது மருமகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாலை மலர்

பாட்னா:

பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஊழல் செய்து சிக்கி தற்போது ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதன் காரணமாக ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியை அவரது மனைவி ராப்ரிதேவியும், 2 மகன்களும் நடத்தி வருகிறார்கள்.

லாலுபிரசாத்தின் மூத்த மகன் தேஜ்பிரதாப்புக்கும், இளைய மகன் தேஜஸ்விக்கும் இடையே கட்சியை வழி நடத்துவதில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் ராப்ரிதேவிக்கும், தேஜ்பிரசாத்தின் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

பாட்னாவில் சர்குலர் சாலை பகுதியில் லாலுபிரசாத்தின் வீடு உள்ளது. நேற்று இரவு அந்த வீட்டில் இருந்து தேஜ்பிரசாத்தின் மனைவி ஐஸ்வர்யா வெளியேறினார். அவர் வீட்டின் வாசலில் நின்று ராப்ரிதேவி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

எனது மாமியார் ராப்ரிதேவி சரியான குணம் கொண்டவர் இல்லை. மகன்களை வழிநடத்துவதில் பாரபட்சம் காட்டுகிறார். என்னை கண்டாலே பிடிப்பது இல்லை.

இன்று திடீரென என் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்தார். தடுக்க முயன்ற என்னை மிரட்டி உதைத்தார். பிறகு காவலர்களை வைத்து என்னை வீட்டில் இருந்தே வெளியேற்றி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

லாலு பிரசாத்தின் மருமகள் ஐஸ்வர்யா ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. சந்திரகாவின் மகள் ஆவார். மகள் தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் சந்திரகா சர்குலர் சாலை பகுதிக்கு விரைந்து சென்று விசாரித்தார்.

பிறகு ஐஸ்வர்யா போலீஸ் நிலையத்துக்கு சென்று ராப்ரிதேவி மீது புகார் அளித்தார். அதன் பிறகு ஐஸ்வர்யா அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

மருமகள் ஐஸ்வர்யாவை ராப்ரிதேவி தாக்கி இருப்பது இது 2-வது முறை என்பது தெரிய வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வீட்டுக்குள் அடைத்து வைத்து ஐஸ்வர்யாவை அடித்து துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியானது.

ஐஸ்வர்யாவுடன் மோதல் ஏற்பட்டதால் தேஜ்பிரதாப் அவருடன் வாழாமல் தனியாக உள்ளார். ஐஸ்வர்யாவிடம் இருந்து விவாகரத்து கோரி கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.