செய்திகள்

சர்வீஸ் போடுவதில் புதிய விதிமுறை: ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனில் சோதனை செய்வது சரியல்ல - சிந்து

சர்வீஸ் விதிமுறையில் மேற்கொள்ளப்படும் சோதனையை ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனில் முயற்சி செய்வது சரியல்ல என இந்திய வீராங்கனை சிந்து கருத்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பேட்மிண்டனில் சர்வீஸ் போடுவதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. புதிய விதிமுறைப்படி, ‘பந்தை சர்வீஸ் செய்யும் போது பேட்மிண்டன் மட்டை (ராக்கெட்) தரையில் இருந்து 1.15 மீட்டர் உயரத்துக்குள் தான் இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை அடுத்த ஆண்டு ஆல்இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் போது பரிசோதிக்கப்படுகிறது. இது இந்திய நட்சத்திர வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்துவுக்கு அதிருப்தி அளித்துள்ளது.

இது தொடர்பாக சிந்து கூறுகையில், ‘என்னை பொறுத்தவரை சர்வீஸ் விதிமுறையில் மேற்கொள்ளப்படும் சோதனை முயற்சியை வேறு ஒரு போட்டித் தொடரில் கொண்டு வந்திருக்கலாம். ஏனெனில் ஆல்-இங்கிலாந்து சாம்பியன்ஷிப், ஒவ்வொருவருக்கும் மிகவும் கவுரவமிக்க போட்டியாகும். சர்வீஸ் விதிமுறையால் எனக்கு பெரிய அளவில் பிரச்சினை எதுவும் கிடையாது. பயிற்சி செய்தால் போதும். அதற்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள முடியும்’ என்றார்.