செங்குன்றம்:
சென்னை புழல் லட்சுமிபுரம் வ.உ.சி. தெருவில் வசித்து வருபவர் திலீப் (32).
இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக உள்ளார். நேற்று இரவு 10 மணி அளவில் இவரது நண்பர் ஸ்டீபன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டீபன் தனது நண்பர்களுக்கு போன் செய்து உடனே சம்பவ இடத்துக்கு வரும்படி அழைத்தார். சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் 7 பேர் அங்கு வந்தனர்.
அந்த கும்பல் திலீப்பை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் வெட்டு காயத்துடன் சாய்ந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
உயிருக்கு போராடிய திலீப் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டீபன் உள்பட 8 பேரை தேடி வருகிறார்கள்.