செய்திகள்

புழல் சிறையில் கைதிகள் பிரியாணி தயாரிக்கவில்லை- ஜெயில் அதிகாரிகள் விளக்கம்

புழல் சிறையில் கைதிகள் பிரியாணி தயாரிக்கும் வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதல்ல என்று ஜெயில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். #PuzhalJail

மாலை மலர்

புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக சமீபத்தில் புகைப்படங்கள் வெளியானது.

இதையடுத்து ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் டி.வி.க்கள், செல்போன், மெத்தைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக 5 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். மேலும் தலைமை வார்டன்களும் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் புழல் சிறையில் கைதிகள் பிரியாணி சமைப்பது போன்றும், அவற்றை கைதிகள் சாப்பிடுவது  போன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

கைதிகளுக்கு அதிகாரிகள் தொடர்ந்து வசதிகள் செய்து கொடுத்து இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரியாணி மற்றும் சிகரெட் உள்ளிட்டவைக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு தருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே கைதிகள் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோ குறித்து ஜெயில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கைதிகள் பிரியாணி தயாரிக்கும் வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதல்ல. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

சிறைத்துறை நிர்வாகத்தின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. ரம்ஜான் பண்டிகை சமயத்தில் சிறைத்துறை விதியின்படி முஸ்லிம் கைதிகளுக்காக அவர்களது உணவை தயாரிக்க அனுமதிக்கப்பட்டது.