செய்திகள்

புதுச்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்து இளம்பெண் உள்பட 2 பேர் பலி

நாமக்கல்லுக்கு வேலை தேடி வந்த இளம்பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

கொல்லிமலை:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது30). இவரும், இவரது உறவுக்கார பெண் பூங்கொடி (30) என்பவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நூல் மில்லில் வேலை தேடி நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தனர்.

இதையடுத்து 2 பேரும் ராசிபுரம் அருகே உள்ள பாச்சல் பகுதியில் ஒரு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, நாமக்கல், ராசிபுரம், புதுச்சத்திரம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் நூல் மில்லில் வேலை கேட்டு அலைந்தனர். ஆனால், அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் புதுச்சத்திரம் அருகே உள்ள அணை பாளையம் பகுதியில் ஒரு நூல்மில்லில் வேலைக்கு ஆட்கள் தேவைபடுவது குறித்த தகவலை அறிந்த சரவணன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் பூங்கொடியை அழைத்துக் கொண்டு நேராக அணை பாளையம் பகுதியை நோக்கி சென்றார்.

அப்போது பாச்சல்- அணைப்பாளையம் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலையோரம் உள்ள சுமார் 15 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளத்தில் தலைகுப்புற நிலையில் வேகமாக விழுந்தது. இதில் சரவணன், பூங்கொடி ஆகிய இருவருக்கும் தலையிலும், முகத்திலும் படுகாயம் ஏற்பட்டு வலியால் கதறி துடித்தனர். அவர்கள் அழுகுரல் சத்தத்தை கேட்டு அக்கம்- பக்கத்தினர் அங்கு ஓடி வந்து, பள்ளத்தில் இறங்கி 2 பேரையும் மீட்டு உடனே சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு ஒரு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

ராசிபுரம் அரசு மருத்துவ மனையில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் சேலம் அரசு மருத்துவமனைக்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சரவணன் போகும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இதனை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் பூங்கொடியை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் உடலும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #taminews