5வது சீசன் புரோ கபடி தொடரின் லீக் போட்டியில் புனேரி பால்டன் அணி 38-22 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.
அரியானா மாநிலம் சோனிபட்டில் நடைபெற்றுவரும் ஐந்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரின் 76 வது போட்டியில் ‘ஏ’ பிரிவில் இருக்கும் அரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை செய்தன.
இப்போட்டியின், முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புனே அணி 18-6 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் பாதியின் முடிவில் இரு அணிகளுக்கும் 12 புள்ளிகள் வித்தியாசம் இருந்தது. இது அரியானா அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் புனே அணி சிறப்பாக விளையாடியது. புள்ளி வித்தியாசத்தை குறைப்பதற்காக அரியானா அணி போராடியது. இரண்டாம் பாதியில், புனே அணி 20 புள்ளிகளும், அரியானா அணி 16 புள்ளிகள் எடுத்தன. இதன்மூலம் முழுநேர முடிவில் புனேரி பால்டன் அணி 38-22 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
புனே அணியின் தீபக் ஹூடா அதிகபட்சமாக 13 தொடுபுள்ளிகள் எடுத்தார். அரியானா அணித்தரப்பில் தீபக் குமார் தாஹியா 11 தொடுபுள்ளிகள் எடுத்தார். இப்போட்டியில் வெற்றி பெற்ற புனே அணி 37 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், அரியானா அணி 46 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றன.
நாளை நடைபெறும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் - ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.