செய்திகள்

ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை: புஜாரா 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

துபாய் :

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா 873 தரப்புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்த கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார். அவரது தரப்புள்ளிகள் 877ல் இருந்து 893 புள்ளிக்கு அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஒரு இடம் பின்தங்கி 4-வது இடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்று இடங்கள் பின்தங்கி 5-வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா 3-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், குறைந்த போட்டிகளில் 300 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்த அஷ்வின் 4-வது இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திலும், தென்னாப்ரிக்காவின் ககிசோ ரபாடா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

அணிகளுக்கான தரவரிசையில் 124 தரப்புள்ளிகளுடன் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் நீடிக்கின்றன.